×

கும்பகோணம் கோயில்களில் வைகாசி விசாக தீர்த்தவாரி

கும்பகோணம், மே 21: கும்பகோணம் மங்களாம்பிகையம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயில், பாணாதுறையிலுள்ள சோமகலாபிகையம்மன் சமேத பாணபுரீஸ்வரர் கோயில் மற்றும் திருச்சேறையிலுள்ள ஞானவல்லியம்மன் சமேத சாரபரமேஸ்வரர் கோயிலில் நேற்று வைகாசி விசாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆதிகும்பேஸ்வரரும், பாணபுரிஸ்வரர் சுவாமிகள் கும்பகோணம் பகவத் படித்துறையில் சிறப்பலங்காரத்தில் அம்பாளுடன் காட்சியளித்தனர். பின்னர் அஸ்ர தேவருக்கு 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்து பின் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதேபோல் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் உள்ள பிந்துசுதா திருக்குளத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக சாரபரமேஸ்வரர் சுவாமி அம்பாளுடன் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். சிவசூரிய பெருமானுக்கு மகா அபிஷேகம்: கும்பகோணம் அடுத்த சூரியனார்கோயிலில் சூரியனை மூலவராக கொண்டு ஏனைய கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அவரவர்களுக்குரிய வாகனங்களோடு பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இதனால் வாரம்தோறும் மட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநிலம், மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் தரிசனத்துக்காக வருவர். சூரியனார்கோயிலில் தமிழ் மாதம் தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சூரியனுக்கு மகா அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி சூரிய பகவானுக்கு சிறப்பு ஹோமம்,  மகா அபிஷேகம் நடந்தது.

Tags : Vishakai Tirthvari ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...